சென்னை அடுத்துள்ள ஒரு பிரபல தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 50 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த வேலன்கண்டிகை பகுதியில் பிரபல ஆடை வடிவமைப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில், சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மதியம் தொழிலாளர்கள் வழக்கம் போல் உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது, குடிப்பதற்கு அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் உள்ள குடிநீரை பருகியுள்ளனர். சிறிது நேரத்தில், தண்ணீர் குடித்த 50 -க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் திருத்தணி மற்றும் பள்ளிபட்டுப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, தகவல் அறிந்த ஆர்.கே.பேட்டை போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் நலனில் தி.மு.க அரசு முறையாக அக்கறை காட்டவில்லை. தொழிலாளர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமைகளை முறையாக பெற்றுக் கொடுத்தாலே இது போன்ற பாதிப்புகள் இருந்திருக்காது என பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.