தி.மு.க அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பொன்முடி மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோரை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்குகளை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தி.மு.க அமைச்சர்கள் மீதான வழக்குகளை யார் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுக்கலாம் என உத்தரவிட்டது.
இந்த நிலையில், தி.மு.க அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்டேஷ், அமைச்சர்களுக்கு எதிராக வழக்கை என்னை விசாரிக்கும்படி, தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வழக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோரின் வழக்கு வரும் 27, 28,29, மற்றும் மார்ச் மாதம் 5-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.
மேலும், தி.மு.க அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு, வரும் 12, 13 -ம் தேதியும், தி.மு.க அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு வரும் 19-ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை விசாரணை நடைபெறும் என அறிவித்தார். இதனால், தி.மு.க தரப்பு நடுக்கத்தில் உள்ளது.