தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் கூடியுள்ள பொதுமக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
அமாவாசை என்பது முன்னோர்களை வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கும் நாள். மாதந்தோறும் அமாவாசை வந்தாலும் தை அமாவாசை மிகவும் விசேஷம் நிறைந்தது. தை அமாவாசையில் திதி கொடுத்தால் ஆண்டு முழுவதும் முன்னோர்களுக்கு விரதம் இருந்து படையல் வைத்ததற்கு சமம் என்பது நம்பிக்கை. தை அமாவாசை இன்று காலை 8.50 மணிக்கு துவங்கி பிப்ரவரி 10ம் தேதி அதிகாலை 4.28 மணிக்கு முடிவடைகிறது.
அமாவாசை நாளான்று நண்பகல் 12 மணிக்கு முன்பு திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதிகாலை நான்கு மணியளவில் இருந்து கொடுக்க ஆரம்பித்து விடலாம். சூரிய உதயம் முன்பு பிரம்ம முகூர்த்தம் இருப்பதால் சூரியன் வந்தபிறகு கொடுக்க வேண்டும் என்று கிடையாது. பிரம்ம முகூர்த்தத்தில் செய்வது புண்ணியமாகும். ராகு காலம், எம கண்ட நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் தர்ப்பணம் கொடுக்கலாம்.
இந்நிலையில் தை அமாவாசையை முன்னிட்டு புனித நீர்நிலைகளில் பொதுமக்கள் குவிந்து முன்னோர்களை வணங்கி நீராடி தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீராடி வருகின்றனர். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள், கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். பின்னர் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.
இதேபோல், கன்னியாகுமரி , திருச்செந்தூர், பவானி கூடுதுறை,ஸ்ரீரங்கம், கும்பகோணம், தஞ்சை, பூம்புகார், பாபநாசம், திருவையாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.