உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி வன்முறை வகுப்புவாதமாக்க வேண்டாம் என நைனிட்டால் மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தாகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானி பகுதியில் நேற்று மாலை ஆக்கிரமிப்பு எதிர்ப்பு இயக்கத்தின் போது வன்முறை வெடித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பன்பூல்புராவில் “சட்டவிரோதமாக கட்டப்பட்ட” மதரஸா இடிக்கப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து பன்பூல்புராவில் மாவட்ட ஆட்சியர் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். வன்முறையில் ஈடுபடும் நபர்களை கண்ட உடன் சுடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் நைனிட்டால் மாவட்டம் ஹல்த்வானி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த மதரஸாவை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன்போது, போலீஸாருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் மீது கற்களை வீசியும், காவல் நிலையத்தை முற்றுகையிட்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்நிலையில் காவல்துறையினர் கலவரக்காரர்களை அடக்கி, நிலைமை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தற்போது பன்பூல்புராவில் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவ படைகளும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கை பராமரிக்க அண்டை மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீஸ் படையும் நகரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி வன்முறை வகுப்புவாதமாக்க வேண்டாம் என நைனிட்டால் மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹல்த்வானி வன்முறை குறித்து நைனிட்டால் மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங், செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்,
கலவரக்கார கும்பலால் காவல் நிலையம் முற்றாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது துரதிஷ்டவசமான சம்பவம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
இந்த சம்பவம் வகுப்புவாதமானது அல்ல. இதை வகுப்புவாதமாகவோ, உணர்ச்சிகரமானதாகவோ ஆக்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார். அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இந்த வன்முறையில் சிக்கி இதுவரை இரண்டு பேர் இறந்துள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்தார்.