உத்திர பிரதேசத்தில் புகழ்பெற்ற வாரணாசியில் மௌனி அமாவாசையை முன்னிட்டு கங்கை நதியில் ஏராளமானவர்கள் புனித நீராடி, வழிபாடு நடத்தினர்.
கிருஷ்ண பக்ஷத்தின் அமாவாசை திதியை மௌனி அமாவாசை என்பர். மௌனி அமாவாசை பித்ரு தோஷத்தைப் போக்கவும், முன்னோர்களின் ஆசிகளைப் பெறவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்நாளில் தர்ப்பணம், பிண்டம், தானம் போன்றவற்றை வழங்குவது வழக்கம். அதேபோல் மௌனி அமாவாசை அன்று புனித நதியில், புனித நீராடுவதற்கு மிகவும் உகந்த நாள் என்றும் நம்பப்படுகிறது.
அந்தவகையில் இன்று மௌனி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வாரணாசிக்கு சென்று, கங்கை நதியில் புனித நீராடி, சடங்குகள் செய்து, முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர்.
பெண்கள் விளக்குகளை ஏற்றி பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர். பக்தர்கள் சிவபெருமான், விஷ்ணு பகவான், லட்சுமி தேவி மற்றும் அவர்களின் முன்னோர்களை வணங்கி தொடர்ச்சியான சடங்குகள் மற்றும் மௌனி விரதத்தையும் நடத்துகின்றனர்.
அதேபோல் பித்ரு தோஷத்தை போக்கும் சடங்குகளையும் செய்து, முன்னோர்களின் ஆசிகளைப் பெற்று வருகின்றனர்.