அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலுக்கு முதல் வெளிநாட்டு தலைவரான பிஜி-யின் துணை பிரதமரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான பீமன்பிரசாத் சென்றுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. பாரதப் பிரதமர் மோடி பூஜைகள் செய்து குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார்.
கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்தியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு பிஜி நாட்டின் துணை பிரதமரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான பீமன்பிரசாத் சென்று பகவான் ஸ்ரீ ராமரை தரிசனம் செய்தார்.
அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவிற்கு பிறகு வருகை தந்த முதல் வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையும் பீமன்பிரசாத் பெற்றுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ” இந்த புனித நகரத்திற்கு வந்து பகவான் ஸ்ரீ ராமரை தரிசனம் செய்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன்.
பகவான் ஸ்ரீ ராமருக்காக அர்ப்பணித்த இந்த கோவில் இந்தியாவுக்கும் பிஜிக்கும் இடையிலான நீடித்த உறவை மேலும் வலுப்படுத்தும் ” என்று கூறினார்.
மேலும் அவர் பகவான் ராமரின் இலட்சியங்களை ஏற்று, அவரின் வாழ்க்கைக் கொள்கைகளிலிருந்து உலகம் உத்வேகம் பெற வேண்டியதன் அவசியத்தை மேற்கோள் காட்டி, ராமரின் கொள்கைகளை ஏற்றுக்கொள்வது ஒருவரின் வாழ்க்கையில் தனித்துவமான மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகிறது என்று கூறினார்.