அதிமுக தலைமைக்கு அரசியல் அனுபவம் போதவில்லை, இவர்கள் தேடிப்போன சமூகமும் இப்போது பாஜக பக்கம்தான் நகர்ந்துக் கொண்டிருக்கிறது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
அதிமுகவினர் பாஜக கூட்டணியில் வரவேண்டும் என்று எந்த பாஜகவின் தலைவரும் கருத்து சொன்னதில்லை!
ஆனால் அதிமுகவின் ஒரிரு தலைவர்கள் மட்டும் பாஜகவுடன் கூட்டணி இல்லை! இல்லை! என்று சொல்லிக்கோண்டே இருக்கிறார்கள்! பொதுக்கூட்டங்களில் கூட மைக் பிடித்து, நாங்கள் பாஜகவுடன் கூட்டனியில் இல்லை! நாங்கள் கூட்டனியில் இல்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள்!
கல்யாண பரிசு என்னும் ஒரு பழைய சினிமாவில் கதாநாயகி வீட்டில் இருப்பவர்களிடம் சொல்வதுபோல், ஆனால் உரத்த குரலில் “நான் பள்ளிக்கூடம் போகிறேன்” என்று சொல்லுவாள்! அது வீட்டில் இருப்பவர்களுக்கு சொல்வதல்ல, மேல் மாடியில் குடியிருக்கும் அவளது காதலனுக்கு சொல்வது!
அதுபோல, குறிப்பிட்ட சமூகத்தவர்களின் காதுகளில் விழவேண்டும் என்பதற்காக “நாங்கள் பாஜக கூட்டணியில் இல்லை” என உரக்க சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ஓரிரு அதிமுக தலைவர்கள்!
”அப்படி சொன்னால்தான் அந்த குறிப்பிட்ட சமூகத்தவர்கள் எங்களிடம் வருவார்கள், அதனால்தான் நாங்கள் பாஜகவுடன் கூட்டணியை உடைத்துக்கொண்டோம்!”- என்றுகூட ரகசியத்தை பல இடங்களில் போட்டுடைத்தும் வருகிறார்கள்!
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அரிவித்த அடுத்த நாளில் அந்த குறிப்பிட்ட சமூகத்தவர்வர்கள் மத்தியில் போய் நின்று, மைக் பிடித்து, “நான் வந்துவிட்டேன், இப்போது சந்தோசமா?” என்று கேட்டார் அதிமுகவின் தலைவர்!
ஆனால் இவர் காதலிப்பதாக சொல்லும் அந்த குறிப்பிட்ட சமூகத்தவர்கள் இப்போது யூடேன் போட்டு பாஜக பக்கம் வருகிறார்கள்! இப்போது இலவு காத்த கிழியாக மாறிவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்!
தேர்தல் என்று வந்தால் எல்லா கட்சியினரும், எங்கள் கட்சியின் கதவுகள் திறந்தே இருக்கிறது, எங்களின் கொள்கைகளில் உடன்பாடு உள்ளவர்கள், எங்களின் ஆட்சியை விரும்புகிறவர்கள் எங்களோடு வந்து சேருங்கள் என அழைப்பு விடுப்பது வழக்கம்!
அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் ஒரு அழைப்பினை அனைவருக்குமாக விடுத்தார்! அது பொதுவான அழைப்புதான்!
ஆனால், தேர்தல் கூட்டணிக்காக ஒரு குழுவை அமைத்துக்கொண்டு, கூட்டனிக்காக யாராவது வருவார்களா? என எதிர்பார்த்து, யாரும் வராத காரணத்தால், ஏமாந்து, ஏமாந்து, வெறுங்கடையில் டீ ஆற்றிக்கொண்டிருக்கும் அதிமுகவின் ஒரு தலைவர், ”அமித்ஷா வேண்டுமானால் அவர்களின் கதவை திறந்து வைத்து எங்களை கூட்டணிக்கு அழைக்கலாம், ஆனால் நாங்கள் பாஜகவுக்கான கூட்டணி கதவை அடைத்து விட்டோம்,” என அறிக்கை விட்டார்!
ஆனால் அதிமுகவினர் ஓடோடி வந்து பாஜகவின் கதவுகளை தட்டுகிறார்கள்! நாங்கள் பாஜகவுடன் வருகிறோம் என்கிறார்கள்! பாஜகவின் மாநில தலைவரும் மக்கள் தலைவருமான அண்ணாமலை அவர்களின் நடை பயணத்தில் அனைத்து கட்சியினரும் பெரும் கூட்டமாக கலந்துகொண்ட போதிலும், அந்த மாற்றுக்கட்சி கூட்டத்தில் பெரும்பங்கு கூட்டம், அதிமுக வாக்காளர்கள் கூட்டம் என பத்திரிக்கையாளர்கள் சொல்கிறார்கள்!
7-2-2024 அன்று அதிமுகவின் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் மூத்த தலைவர்களுமான 16 பிரபலங்கள் டெல்லி சென்று, பாஜக தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார்கள்!
அதிமுகவின் எந்த கதவு அடைக்கப்பட்டது? இந்த அனுபவம் மிக்க அதிமுகவின் முன்னால் சட்டமன்ற தலைவர்களான, செங்கோட்டையன், கே.பி. முனுசாமி போல் தகுதி உள்ள அதிமுகவின் தலைவர்கள் எந்த கதவை திறந்துக்கொண்டு வந்து, பாஜகவின் கதவுகளை தட்டினார்கள் என அரசியல் வல்லுனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்!
அதிமுக தலைமைக்கு அரசியல் அனுபவம் போதவில்லை! இவர்கள் தேடிப்போன சமூகமும் இப்போது பாஜக பக்கம்தான் நகர்ந்துக் கொண்டிருக்கிறது, இவர்களின் தொண்டர்களும் இப்போது நடைபயணத்தின் பக்கம் நகர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்! ஓரிரு தலைவர்கள் மட்டும் “நாங்கள் கதவை அடைத்துவிட்டோம்” என்று யாருக்கோ குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!
மற்ற அதிமுகவின் விவரமான தலைவர்களிடம் இருந்து எவ்வித குரலும் வெளிப்படவில்லை! இந்த, அதிமுகவின் சூழலை பார்க்கும்போது, “என்னவோ நடக்குது அதிமுகவிலே” என்றுதான் பாடத்தோன்றுகிறது!
”அயோத்தியில் கட்டாமல் வேறு எங்கு ராமர் கோயில் கட்டமுடியும்?” என்று அதிமுகவின் புரட்சி தலைவி அம்மா கேட்ட கேள்வி, இன்றுவரை அதிமுக தொண்டர்களின் காதுகளில் ஒலித்துக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது! திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது நெற்றியில் இருந்த திருநீற்றை அழித்துவிட்டதை, அதிமுக தொண்டர்கள் ரசிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது!
இந்து மதத்திற்கு எதிரான திராவிட கழகத்திலும் திமுகவிலும் பழகியபோதும், மூகாம்பிகை ஆலயத்தில் தன்னை ஒப்புவித்தவர் அல்லவா புரட்சித்தலைவர்!, என்று அதிமுக தொண்டர்கள் முனுமுனுப்பதாக சொல்லப்படுகிறது!
மொத்தத்தில் அதிமுகவின் தலைவர்களில் ஓரிருவர் தொண்டர்களை சரியான பாதையில் வழிநடத்த தவறிவிட்டதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்! எனவேதான் கூட்டம் கூட்டமாக அதிமுகவின் தொண்டர்களும் தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் பாஜகவை நோக்கி நகர்வதாக சொல்லப்படுகிறது!
“தீய சக்தியாக இருந்த திமுக பங்காளியாக மாறியது எப்படி?” என்று தற்போதைய தலைமையை பார்த்து அதிமுக தொண்டர்கள் கேட்பது நம் காதுகளில் விழுகிறது!
பிரதமர் நரேந்திரமோடியின் தேச பக்தியும்,சேவையும்,மக்கள்நல திட்டங்களும், தமிழக பாஜக தலைவர் மக்கள் தலைவர் அன்ணாமலை அவர்களின் சுறுசுறுப்பும் பேராற்றலும் தங்களை பெரிதும் கவர்ந்துவிட்டதாக அவர்கள் சொல்கிறார்கள்! ”உலக புகழ் மிக்க மாபெரும் தலைவரான நமது பிரதமர் நரேந்திரமோடிக்கு ஆதரவாக செயல்பட வேண்டியதுதான் நமது தலையாய முதல் கடமையாகும்”, என்கின்றனர் சாரைசாரையாக பாஜகவை நோக்கி வரும் அதிமுகவினர்!
அரசியலில் நிரந்தரம் என்று எதுவும் இல்லை! புரட்சித்தலைவரும் புரட்சி தலைவியும் என்ன சொன்னார்களோ அதைத்தான் நாங்கள் செய்கிறோம் என்று, நடை பயணத்தில் என்னை சந்தித்த அதிமுக தொண்டர் ஒருவர் என்னிடம் சொன்னார்! எனத் தெரிவித்துள்ளார்.