முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங் உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது அரசியலுக்கு அப்பாற்பட்ட முடிவு என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களுமான பிவி நரசிம்மராவ், சவுத்ரி சரண் சிங் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
அவர்களுடன், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும் நாட்டின் உயரிய சிவிலியன் விருது வழங்கப்படவுள்ளது.இதுதொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அரசியலுக்கு அப்பாற்பட்டு, இதுபோன்ற முடிவுகளை மத்திய அரசு எடுப்பதாக அவர் தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் இதை உணர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேபோல் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் ஜிக்கு உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா வழங்கி கவுரவிக்க முடிவு செய்த இந்திய அரசை மனதார வாழ்த்துகிறேன்.
விவசாய சகோதரர்களின் அனைத்து துறை முன்னேற்றத்திற்காக சௌத்ரி ஜி ஆற்றிய பணி மறக்க முடியாதது. அவர் நமது சமூக மற்றும் கலாச்சார விழுமியங்களின் உண்மையான பிரதிநிதி. எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தை பாதுகாக்க போராடினார்.
அவரது அரசியல் பாரம்பரியத்தில் உருவாக்கப்பட்ட பல அரசியல் கட்சிகள் இன்று நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தி, வளப்படுத்தி வருகின்றன. தேசத்தைக் கட்டியெழுப்ப அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவிற்கு ய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.