தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 45 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல்நாட்டு விழா நடந்தது.
இந்த விழாவில், தி.மு.கவைச் சேர்ந்த மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
பின்னர், அங்கிருந்து சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், செல்லும் வழியில் உள்ள கால்வாய் கால்நடை மருந்தகத்திற்குள் திடீரென்று நுழைந்தார். அங்கு, இருந்த கால்நடை மருத்துவரிடம் கால்நடை மருத்துவமனையில் பராமரிக்கப்படும் கோப்புகளை வாங்கிப் பார்வையிட்டார்.
கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தார். அங்கிருந்த மருத்துவர் தட்டுத்தடுமாறி ஏதோ சொன்னார். அப்போது, அமைச்சர் அனிதா கிருஷ்ணனின் பாதுகாவலர், அந்த கோப்புகளைப் பார்வையிடும்படி அமைச்சரிடம் கூறினார்.
இதனால், ஆத்திரமடைந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தனது பாதுகாவலரை அடிக்கக் கை ஓங்கினார். தன்னைச் சுற்றி நிருபர்கள் மற்றும் வீடியோ கிராபர்கள் இருப்பதை உணர்ந்து, சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். அமைச்சரின் இந்த செயலால் அங்கிருந்த அரசு ஊழியர்கள் மற்றும் உடன் சென்ற தி.மு.க கட்சி நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
தனது பாதுகாவலரையே அமைச்சர் அடிக்கக் கை ஓங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.