கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட எட்டு பேரில் 7 பேர் இன்று தாயகம் திரும்பினர்.
கத்தார் நாட்டில் உள்ள ஒரு தனியார் கப்பல் நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த முன்னாள் கடற்படை வீரர்களான கேப்டன் நவ் தேஜ் சிங் பால், தலைமையில் 8 பேர் பணியாற்றி வந்தனர்.அவர்கள் மீது உளவு பார்த்ததாக குற்றச்சாட்ட எழுந்தது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த கத்தார் நீதிமன்றம், 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது. ஆனால் அவர்களை விடுவிக்க இந்திய அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனைத்தொட்ர்நது அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறைக்கப்பட்டது.
பின்னர் இரு நாட்டு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து 8 பேரையும் கத்தார் அரசு விடுவித்தது. அவர்களில் 7 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். இன்று அதிகாலை விமானம் மூலம் டெல்லி வந்த அவர்களுக்கு உறவினர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கத்தாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தஹ்ரா குளோபல் நிறுவனத்தில் பணிபுரிந்த 8 இந்திய பிரஜைகள் விடுதலை செய்யப்பட்டதை இந்திய அரசு வரவேற்கிறது.
அவர்களில் 8 பேரில் 7 பேர் இந்தியா திரும்பியுள்ளனர். அவர்கள் தாயகம் திரும்ப உதவிய கத்தார் அரசின் அமீர் எடுத்த முடிவை நாங்கள் பாராட்டுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.