பிரேசிலில் இருந்து பாப் அல்-மன்டேப் (bab-al-mandeb) என்ற ஜலசந்தி வழியாக சென்ற, சரக்கு கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் கப்பல் சிறிய அளவில் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடியை இஸ்ரேல் கொடுத்து வருகிறது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி தீவிரவாதிகள், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால், செங்கடல் வழியாக செல்லும், இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் கப்பல்கள் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
செங்கடலில் ஹவுதி தீவிரவாதிகளின் தாக்குதலைத் தடுக்க, அங்கு அமெரிக்கா தனது போர் கப்பல்களை நிலை நிறுத்தியுள்ளது. இந்த கப்பல்கள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, அமெரிக்காவும், இங்கிலாந்தும் இணைந்து ஹவுதி தீவிரவாதிகளின் பல்வேறு இலக்குகளைக் குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், மீண்டும் செங்கடல் வழியாக சென்ற கப்பலை குறிவைத்து, ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை கிரேக்கத்திற்கு சொந்தமான, மார்ஷல் தீவுகளின் கொடியுடன் கூடிய எம்வி ஸ்டார் ஐரிஸ் (MV Star Iris) என்ற சரக்குக் கப்பல், பிரேசிலில் இருந்து புறப்பட்டது. இந்த கப்பல் பாப் அல்-மன்டேப்(bab-al-mandeb) என்ற ஜலசந்தி வழியாக செல்லும் போது, ஹவுதி தீவிரவாதிகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், கப்பல் சிறிய அளவில் சேதமடைந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக கப்பலில் இருந்தவர்கள் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.