விவசாயிகள் போராட்டம், முன்னெச்சரிகையாக டெல்லி மெட்ரோவின் எட்டு நிலையங்களில் வாயில்கள் மூடப்பட்டுள்ளன.
சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மத்திய அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் டெல்லியை நோக்கி பல்வேறு மாநிலங்களில் இருந்து அணி, அணியாக விவசாயிகள் பஞ்சாப்பின் ஃபதேகர் சாஹேப்பில் இருந்து இன்று காலையில் தொடங்கினர்.
இப்பேரணி பஞ்சாப் – ஹரியாணா, ஹரியாணா – டெல்லி எல்லைகளைக் கடந்து தேசிய தலைநகரை அடைய வேண்டும். விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல் தடுக்க எல்லைப் பகுதிளில் சிமென்ட் தடுப்புகள், முள்படுக்கை, முள்வேலி போன்றவற்றைக் கொண்டு பாதைகள் தடுக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளின் பேரணி பஞ்சாப்பில் இருந்து காலை 10 மணிக்கு தொடங்கி இரண்டு மணிநேரம் கழித்து ஹரியாணா எல்லையான ஷம்புவை அடைந்தது. இந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது ஹரியாணா போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசி தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில் டெல்லி மெட்ரோவின் எட்டு நிலையங்களில் வாயில்கள் மூடப்பட்டன.
மேலும் இந்த நிலையங்களில் வாயில்கள் வழியாக பயணிகள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
காவல் துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக வாயில்கள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ், மத்திய செயலகம், படேல் சௌக், உத்யோக் பவன், ஜன்பத் மற்றும் பாரகாம்பா சாலை ஆகிய பல நிலையங்களில் பல வாயில்கள் மூடப்பட்டுள்ளன என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கான் மார்க்கெட் மெட்ரோ நிலையத்தின் ஒரு வாயில் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டுள்ளது என்று கூறினார்.