தி.மு.க-வைச் சேர்ந்த இலாகா இல்லாத அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடைக்குமா அல்லது கிடைக்காதா என, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
வட சென்னை பாராளுமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா, ஆர்.கே.நகரில் நடைபெற்றது. அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.
அப்போது பேசியவர்,
வட சென்னையில் இருப்பவர்கள் எல்லாம் ஆதி குடி தமிழர்கள். குறிப்பாக, மீனவ நண்பர்கள் வாழும் பகுதி. சென்னையில் உள்ள 3 எம்.பி-க்கள் குடும்ப அட்ரசை வைத்து செயல்கின்றனர். அவர்களை வீட்டுக்கு அனுப்பிவைக்கும் நேரம் இது. இந்த முறை வடசென்னையை பா.ஜ.க நிச்சயம் கைப்பற்றும். அடுத்த 80 நாட்களில் கடினமாக உழைத்து வெற்றி பெறுவோம்.
தமிழக சட்டப்பேரவையில், சபாநாயகர் அப்பாவு, தி.மு.க தொண்டனைவிட மிக மோசமாக நடந்து கொண்டார். ஒரு காலத்தில், ஜாதி சங்கங்களின் தலைவன், ஜாதி வன்முறையைத் தூண்டியது கருணாநிதி எனப் பேசிய அப்பாவு, இப்போது மாற்றிப் பேசுகிறார். சபாயநாகர் என்பவர் நடுநிலையானவர். ஆனால், சபாநாயகர் அப்பாவு அப்படி நடந்து கொண்டாரா என்றால் இல்லை.
ஆளும் கட்சி தயாரித்த உரையில் ஏராளமான பொய்கள் உள்ளது. குறிப்பாக 10 பொய்களைச் சொல்லலாம். அதனால்தான் ஆளுநர் அதைப் படிக்கவில்லை என்பது எனது கருத்து.
அந்த 10 பொய்கள் என்னவெனறால், பொய் 1: நாட்டிலே அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது, அதற்கு சான்று சமீபத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு என்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னரே, தொழில்முனைவோர் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அதற்கு தீர்வும் காணாமல், வசூலில் மட்டுமே குறியாக உள்ளனர்.
குறிப்பாக, கடந்த ஆண்டு உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ. 2,000 கோடி முதலீடு செய்வதற்கு ஒரு காலணிகள் தயாரிப்பு நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. அந்த தொழிற்சாலை பணிகள் நடைபெறுகிறா என எந்த தகவலும் இல்லை.
உலக முதலீட்டாளர் மாநாட்டில் 6.6 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கொண்டு வந்துள்ளதாகப் பெருமைப்படுகிறார்கள். இது மிகவும் சிறிய தொகை.
உத்தரபிரதேசம் – 33 லட்சம் கோடி ரூபாய், குஜராத் – 26 லட்சம் கோடி ரூபாய், கர்நாடகா – 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ள நிலையில், தமிழகம் முன்னோடி மாநிலம் என்பது தவறான தகவல்.
பொய் 2: சென்னை மற்றும் தென் தமிழகத்தில் பலத்த மழையால் அதிக அளவில் வெள்ளம் ஏற்பட்டது. அதாவது, மிக்ஜாம் புயலின் போது, இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தனர். இயற்கை பேரிடர்களைத் திறம்படக் கையாண்ட தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் எனத் உரையில் தெரிவித்துள்ளனர். ஆளும் கட்சிக்கு அவர்களது கட்சி கூட்டத்தில் பாராட்டலாம். ஆனால், இல்லாத ஒன்றை எப்படி ஆளுநர் சொல்வார். உண்மையில், சமீபத்தில் பெய்த மழை தி.மு.க அரசு சொன்ன பொய்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.
பொய் 3: சரக்கு மற்றும் சேவை வரி மூலமாகத் தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.
2017-18 -ம் நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு அறிமுகப்படுத்திய போது, மாநிலங்களின் வரிவருவாய் அதற்கு முந்தைய நிதியாண்டை ஒப்பிடும்போது 14 விழுக்காடு வளர்ச்சி காணவில்லையெனில் அந்த பற்றாக்குறையான வரிவருவாயை இழப்பீடு தொகையாக மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு வழங்கும் என்று அறிவித்தது. சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் தமிழகத்தின் சொந்த வரிவருவாயின் வளர்ச்சி சதவீதம் மிகவும் குறைவு. ஆனால், சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்திய பின்னர் தமிழகத்தின் சொந்த வரிவருவாயின் வளர்ச்சி சதவீதம் மிக அளவில் அதிகரித்துள்ளது.
2017 -ம் ஆண்டு முதல் 2022 -ம் ஆண்டு வரை சுமார் 27,959 கோடி ரூபாய் GST இழப்பீடு தொகையாகக் கொடுத்தது. அதுமட்டுமல்ல, கொரோனா காலகட்டத்தில் நிதிப்பற்றாக் குறையைச் சமாளிக்க ரூ. 14,336 கோடி, தமிழக அரசுக்கு மத்திய அரசு கடன் உதவி செய்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரியால் ஒரே ஆண்டில் ரூ. 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு எவ்வாறு தி.மு.க அரசு தமிழக மக்களுக்குத் தெரளிவுபடுத்த வேண்டும்.
பொய் 4: சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு மாநில அரசு முன்னுரிமை வழங்குகிறது என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில், சட்டம் – ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதைப் பொது மக்களிடம் கேட்டால் உண்மை புரியும். தினமும் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது.
பொய் 5: மகளிர் உரிமை திட்டத்தைச் செயல்படுத்தி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம் என்கிறார்கள். அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை என்று தேர்தல் வாக்குறுதி வழங்கி விட்டு, சுமார் 1.2 கோடி குடும்ப அட்டை வைத்திருக்கும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கவில்லை.
பொய் 6: புதுமைப் பெண் திட்டம் மூலமாக 2.73 லட்சம் பெண்கள் பயன் அடைந்து வருவதாகக் கூறப்படுள்ளது. இதற்கு முந்தைய ஆட்சியின் போது நடைமுறையில் இருந்த தாலிக்குத் தங்கம் எனத் திட்டத்தை நிறுத்தி விட்டனர். மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக புதுமைப் பெண் என்ற திட்டத்தைத் தி.மு.க அரசு அறிமுகப்படுத்தியது எனச் சொல்கிறார்கள். இப்படி உண்மைக்குப் புறம்பான தகவலை ஆளுநர் உரையில் கொடுத்துள்ளனர்.
பொய் 7: முதல்வரின் காலை உணவு திட்டம், நாட்டின் முதன்மை மாநிலம் என்கிறார்கள். உண்மையில், பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமல்லாது காலை உணவு திட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. புதிய கல்விக் கொள்கை திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது. 2020 முதல் 2022 -ம் ஆண்டு வரை, இந்த திட்டத்திற்குத் தமிழகத்திற்கு ரூ. 1,146 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பொய் 8: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தமிழ்நாடு மேம்பாட்டுச் செயல் திட்டம் – 2024 எனும் சட்ட முன்வடிவை நடப்புக் கூட்டத் தொடரின் போது அரசு அறிமுகப்படுத்த உள்ளது என்கின்றனர்.
உண்மையில், கடந்த ஆண்டு, பட்டியல் சமுதாய மக்களுக்கு மத்திய அரசு வழங்கிய சுமார் 10,000 கோடி ரூபாய் நிதியை செலவிடாமல் திருப்பியது தி.மு.க அரசு. இனியும் தி.மு.க-வின் பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்பத் தயாராக இல்லை.
பொய் 9: சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பை நடத்துமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்கிறார்கள்.
கடந்த ஆட்சியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க குலசேகரன் குழு அமைக்கப்பட்டது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு குலசேகரன் கமிஷனை நீடிக்க மறுத்துவிட்டறனர். அப்படி இருக்கையில், மத்திய அரசிடம் இது தொடர்பாக எதற்கு வலியுறுத்துகிறீர்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
பொய் 10: தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டம் நாட்டின் முன்னோடி திட்டம் என்கிறார்கள்.
உண்மையில், விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பவர்களை, சிறந்த குடிமகன் என்று அங்கீகரித்து, அவர்களுக்கு ரூ. 5,000 வழங்கப்படும் என்று சொன்னது மத்திய அரசு. அதையும் செய்தும் வருகிறது. 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு அறிமுகம் செய்த இந்த திட்டத்திற்கு தி.மு.க அரசு சூட்டிய பெயர் இன்னுயிர் காப்போம் திட்டம். இப்படி பல பொய்கள். மேலும், முதல்வரின் சுய புராணங்களைப் படிக்கமாட்டேன் என்கிறார் ஆளுநர். நாதுராம் கோட்சேவுக்கும், ஆளுநருக்கும் சம்பந்தம் இல்லை.
தமிழகத்தில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்பளம் கொடுக்க வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் சொல்லி இருந்தது. செந்தில் பாலாஜி ஊழல்வாதி என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதனால்,செந்தில் பாலாஜி பதவியை ராஜினாமா செய்ததை வைத்துக் கொண்டு ஜாமீன் தர கூடாது. செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரை சரண்டர் செய்ய வைத்து, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தேர்தல் வேலை செய்யலாம் என நினைக்கிறார்கள்.
சென்னையைப் பொறுத்தவரை பாதை யாத்திரையைப் பல்வேறு வடிவங்களில் நடைபெற்று வருகிறது. மாணவர்கள், மீனவர்கள், காவல் படை எனப் பல தரப்பிலும் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.