கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் குடும்ப உறுப்பினர்கள் அனுமதியுடன் தானம் செய்யப்பட்டன.
ஆனால், மணிகண்டன் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், அன்றைய கேரள முதல்வர் பினராயி விஜயன், அன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விரிவாக ஒரு கடிதம் எழுதினார்.
அதன்பேரில், இந்த விவாகரத்தில் சிக்கியுள்ள சேலத்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனை மற்றும் சென்னையில் இரண்டு கார்ப்பரேட் மருத்துவமனைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மருத்துவம் மற்றும் ஊரகச் சுகாதரப் பணிகள் இயக்குநர் உத்தரவிட்டார்.
அதன்பேரில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், இந்த வழக்கை நிபுணர் குழு விசாரிக்க வேண்டும் என அன்றைய மருத்துவ மற்றும் ஊரக சுகாதரப் பணிகள் இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதன்பேரில், நிபுணர் குழு அமைக்கப்பட்டது. நிபுணர் குழுவும், விசாரணை நடத்தியும், அலசி ஆராய்ந்தும் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தது.
இதனிடையே, இந்திய நோயாளிகளைப் புறக்கணித்துவிட்டு, லெபனான் மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இரண்டு நபர்களுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, அவர்கள் இரண்டு பேருக்கும், ஒருவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையும், மற்றொரு நபருக்கு இருதயம் மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில், முதல் முறையாக அமைக்கப்பட்ட குழுவினர் மற்றும் இரண்டாவதாக அமைக்கப்பட்ட சிறப்பு நிபுணர் குழு தாக்கல் செய்த இரண்டு அறிக்கைகளுக்கும் இடையே மிகப் பெரிய முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தற்போது, மனித உரிமை ஆணையத்தின் பார்வைக்கு சென்றுள்ளது. சர்சைக்குரிய டாக்டர்கள், ஊழியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உள்ளிட்டோரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.
இதனிடையே, இந்த ஒரு சம்பவம் மட்டுமல்லாமல், ஒவ்வொரு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டைக்காட்டிலும், உயிர் காக்கும் மனித உறுப்புகளைப் பெறுவது 56 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.