உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ம் தேதியான இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேற்கத்திய கலாசாரத்தைப் பின்பற்றி, இந்திய கலாசாரத்தையும், பண்பாட்டையும் ஒரு சிலர் காதல் என்ற பெயரில் கேள்விக்குறியாக்கி, கேலிக்கூத்தாக்கி வருவதாக இந்து மக்கள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், இளவயது காதல்களால், 18 வயதில் திருமணம் நடந்து 21 வயதில் திருமண முறிவும் ஏற்படுகிறது என்றும், இதனால் குடும்பச் சிதைவு ஏற்படுகிறது என்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், காதலர் தினத்திற்கு எதிராக இந்து மக்கள் கட்சியினர் போராட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில், சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்துக் காதலர் தினத்திற்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
இதனால், சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. உதவி ஆணையர் தலைமையில், 3 இன்ஸ்பெக்டர்கள் உள்படப் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அந்த பகுதியில் போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.