டெல்லியில் மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த்போஸ் கான்வாய் மீது கார் ஒன்று மோதியது. இதில் சந்தேகம் இருக்கலாம் என ஆளுநர் மாளிகை தெரிவித்து உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பகுதியில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கூட்டாளிகளால் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.
இதனை எதிர்த்து அங்கு பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை சந்தித்து பேசிய ஆளுநர் ஆனந்த் போஸ் டெல்லி சென்றுள்ளார்.
டெல்லியில் இந்தர்புரி காவல் நிலைய எல்லையில், ஆளுநர் உடன் சென்ற கான்வாய் மீது கார் ஒன்று மோதியது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இதனையடுத்து ஆளுநர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் சதி இருக்கலாம் என ஆளுநர் மாளிகை சந்தேகம் தெரிவித்து உள்ளது. மோதிய காரை சிசிடிவி மூலம் அடையாளம் கண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.