இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் தேசிய விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இதில், தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்காக, நர்கிஸ் தத் விருதும், சிறந்த அறிமுகப் படத்துக்காக, இந்திரா காந்தி விருதும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தேசிய விருதுகளில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், சிறந்த அறிமுகப் படத்துக்கான இந்திரா காந்தி விருது, “சிறந்த அறிமுகத் திரைப்பட இயக்குநருக்கான விருது” எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இயக்குநருக்கு பதக்கமும், ரூ.3 லட்சம் பரிசும் வழங்கப்படும்.
தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்துக்கான நர்கிஸ் தத் விருது, இனி வரும் காலங்களில், “தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விருது பெறும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆகியோருக்கு பதக்கமும், தலா ரூ.2 லட்சம் பரிசும் வழங்கப்படும்.
இதனிடையே, தாதாசாஹே பால்கே விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.