மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பகுதியில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளதாக அம்மாநில ஆளுநர் அனந்த போஸ் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சி நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரின் உதவியாளர்கள் மீது ஊழல் மற்றும் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. அவரை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் மற்றும் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதிக்குக்கு பாஜக மாநில தலைவர் சுகந்தா மஜும்தார் நேற்று சென்றபோது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மயங்கி சரிந்தார். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் விதமாக, சந்தேஷ்காலி உட்பட ஏழு கிராம பஞ்சாயத்துகளில், வரும் 19ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்க ஆளுநர் சந்தேஷ்காலி பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சிறப்பு புலனாய்வுக் குழுஅமைத்து விசாரணை நடத்த வேண்டும் அப்பகுதி மக்கள் ஆளுநரை கேட்டுக்கொண்டனர்.
இதனிடையே சந்தேஷ்காலி பகுதியில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளதாகவும், ரவுடிகளுடன் காவல்துறையினர் கைகோர்த்து செயல்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனந்த போஸ் அறிக்கை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.