இந்திய கிரிக்கெட் கவுன்சில் செயலாளர் மற்றும் ஆசியா கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவின் சத்தியம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தின் பெயர் மாற்றும் விழா இந்த மைதானத்தில் நடைபெற்றது. அதன்படி இந்த மைதானத்திற்கு நிரஞ்சன் ஷா மைதானம் என்று பெயர் மாற்றபட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் கவுன்சில் செயலாளர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர், ஐபிஎல் சேர்மன் அருண் துமால், கிரிக்கெட் ஜாம்பவான்கள் கவாஸ்கர், அணில் கும்ப்ளே உள்ளிட்டோர்கள் இருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஜெய் ஷா, 2024 டி20 உலகக்கோப்பையை இந்தியா நிச்சியம் வேலும் என்று இந்திய ரசிகர்களுக்கு சத்தியம் செய்தார்.
இதுகுறித்து பேசிய அவர், “2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. அந்த போட்டியை நான் நேரில் கண்டேன். பத்து போட்டிகளில் தொடர்ந்து நாம் வெற்றி பெற்றும், நம்மால் இறுதிப் போட்டியில் வெல்ல முடியவில்லை.
எனினும் ரசிகர்களின் மனதை இந்தியா வென்றது. நான் ரசிகர்களுக்கு ஒரு சத்தியம் செய்கிறேன். நிச்சயமாக 2024 ஆம் ஆண்டு நடைபெறும் இறுதிப் போட்டியில் நாம் வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை வெல்வோம்.
ரோகித் சர்மா தலைமையில் நிச்சயம் நாம் கோப்பையை கைப்பற்றுவோம். இந்திய அணியின் தேசிய கொடியை நாம் ஏற்றுவோம்” என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக பேசியுள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா விளையாடுவார் அப்படியே விளையாடினாலும் அவர் கேப்டனாக செயல்படுவார் என்று ரசிகர்கள் மனதில் குழப்பம் இருந்தது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையில் தான் இந்திய அணி எதிர்கொள்ளும் என்று ஜெய் ஷா உறுதி செய்துள்ளார்.
இந்த முடிவு பிசிசிஐ நிர்வாகம் மட்டுமல்லாமல் தேர்வு குழுவினருடன் ஆலோசித்த எடுத்து முடிவு என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான கேப்டன்சி குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.