கோவை மருதமலை கோவில் மலைப்பாதையில் சிறுத்தை மீண்டும் தென்பட்டதால், பக்தர்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
கொங்கு மண்டலத்தில் மிகவும் புகழ் பெற்ற திருக்கோவில் கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் ஆகும். இந்த கோவிலுக்குத் தமிழகம் மட்டுமல்லாது கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த கோவில் வனப்பகுதி அருகில் அமைந்திருப்பதால், வனவிலங்குகள் அவ்வப்போது கோவில் பாதை மற்றும் சாலை வழியாகக் கடந்து செல்லும். இதனால், பக்தர்கள் பெரும் அச்சம் அடைந்து வருகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி, மலை அடிவாரம் படிக்கட்டுகள், கோவில் வளாகம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மருதமலை கோவில் வளாகம் அருகே சிறுத்தை ஒன்று கம்பீரமாக சாலை கடந்து சென்றுள்ளது. இதனை அந்த வழியாகச் சென்ற பக்தர் ஒருவர் செல்போனில் படம் பிடித்துச் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்பொழுது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
மருதமலைக்கு வரும் பக்தர்களுக்கு தமிழக அரசு மற்றும் வனத்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.