இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுக வீரராக சர்பராஸ் கான் களமிறங்கியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால் தற்போது இந்த போட்டி டை-யில் உள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று மூன்றாவது போட்டி சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்தப் போட்டியில் அறிமுக வீரராக சர்பராஸ் கான் களமிறங்கிவுள்ளார். அவருக்கு இந்திய டெஸ்ட் அணியின் தொப்பியை முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே வழங்கினார்.
அப்போது சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோருடைய குடும்பத்தினரும் மைதானத்தில் இருந்தனர். அதில் தன்னுடைய மகன் மிகவும் போராடி இந்தியாவுக்காக அறிமுகமானதை நினைத்து உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் சர்பராஸ் கான் தந்தை கண்கலங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அவரிடம் தன்னுடைய அறிமுக இந்திய தொப்பியை சர்பராஸ் கான் அருகில் சென்று காண்பித்தார். அந்த தொப்பியை கையில் வாங்கி தொட்டுப் பார்த்த சர்பராஸ் கான் தந்தை கண்ணீர் விட்டுக் கொண்டே முத்தமிட்டது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.
அவரை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சர்பராஸ் கான் அப்படியே அருகில் ஆனந்த கண்ணீர் விட்ட தம்முடைய மனைவியின் கண்களையும் துடைத்து அன்பை காட்டியது மைதானத்தில் இருந்த அனைவரையும் உணர்ச்சியில் ஆழ்த்தியது.
சமீபத்திய வருடங்களாகவே தொடர்ந்து ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய வந்த சர்பராஸ் கானுக்கு சீனியர்கள் இருந்ததால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.
ஆனாலும் தொடர்ந்து கடினமாக போராடிய தங்களுடைய மகன் ஒரு வழியாக இந்திய அணிக்கு இன்று அறிமுகமானதாலேயே சர்பராஸ் கான் அப்பா இந்தளவுக்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு வாழ்த்து தெரிவித்தனர்.