2024 மக்களவை மற்றும் 4 மாநில சட்டசபை தேர்தல்களில் பாதுகாப்பு பணியில் 3.40 லட்சம் மத்திய ஆயுதப்படையினரை ஈடுபடுத்த மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
மக்களவை மற்றும் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டசபைகளுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆய்த்த பணிகளில் மத்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மாநில அதிகாரிகள் தெரிவித்த தகவல்கள் அடிப்படையில், தேர்தல் நடக்கும் நேரம், ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்படும் அறை, பதற்றமான இடங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, அதற்கு தேவையான மத்திய ஆயுதப்படையினர் குறித்த விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில் சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் நடத்துவதற்காக தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி (3,400 கம்பெனி) 3.40 லட்சம் வீரர்கள் மத்திய ஆயுதப்படையினரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுழற்சி முறையில் அனுப்பி வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.