பீகார் சட்டப்பேரவை சபாநாயகராக பாஜக மூத்த தலைவர் நந்த் கிஷோர் யாதவ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தார். லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக இருந்தார்.
திடீரென கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், பாஜக ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் பெரும்பான்மையை நிரூபித்தார்.
இந்நிலையில், பீகார் சட்டப் பேரவையின் சபாநாயகராக பாஜக மூத்த தலைவர் நந்த் கிஷோர் யாதவ் இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் பேசிய அவர்,பாரபட்சமின்றி சபையை நடத்த முயற்சிப்பதாகவும், அவையின் விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவதாகவும் கூறினார்.பாட்னா சாஹிப் சட்டமன்றத் தொகுதியில் 7 முறை சட்டப்பேரவை உறுப்பினராக நந்த் கிஷோர் யாதவ் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.