கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அமைச்சர் சேகர் பாபுதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரே தவிர, முதலமைச்சர் ஸ்டாலின் இல்லை எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை வடசென்னை பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், தாய்மார்கள், இளைஞர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கு பெற்ற, ‘காக்கிச் சட்டை பேரணி’யாக நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
சிங்காரச் சென்னை என்று பெயர் மட்டும் வைத்துவிட்டு, ஒவ்வொரு ஆண்டும், மழை வெள்ளத்தில் சென்னையை தத்தளிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஊழல் கட்சிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். பல ஆயிரம் கோடி செலவு செய்திருக்கிறோம், 98% வடிகால் பணிகள் நிறைவடைந்து விட்டன என்று பொய் சொல்லி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கட்சிகள் இல்லாமல், ஊழலற்ற, நேர்மையான, சாமானிய மக்களுக்கான அரசு அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது.
வடசென்னையில் தரமான சாலைகள், சுத்தமான குடிநீர் வசதி, சுகாதார மேம்பாடு என எதுவுமே கிடைக்கப் பெறாமல் மக்கள் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால், எளிய மக்கள் படும் துன்பங்களை அறிந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சென்னையின் பாராளுமன்ற உறுப்பினர்களாக தென்சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியனும், மத்திய சென்னையில் தயாநிதி மாறனும், வடசென்னையில் கலாநிதி வீராசாமியும் பதவிக்கு வருவதற்கு அவர்களிடம் இருந்த ஒரே தகுதி வாரிசு என்பதுதான். ஏழை எளிய சாமானிய மக்களின் வலி இவர்களுக்கு எப்படித் தெரியும்?
சென்னை பெருவெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, ரூ.10,500 வழங்கப்பட்டிருக்க வேண்டும். தமிழக பாஜக சார்பாக, ரூ.10,000 வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தினோம். ஆனால், திமுக ரூ.6,000 மட்டுமே கொடுத்தது. அந்தப் பணத்திலும், 75% பணம் மத்திய அரசின் பங்காகும்.
25% மட்டுமே திமுக அரசின் பங்கு. சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு, ரூ.1,000 கோடி நிதி கொடுக்கப்பட்டுள்ளது. மழை நீர் வடிகாலுக்கு என தனியாக ரூ.1,300 கோடியும், மற்றும் நீர் நிலைகளின் கரைகளை மேம்படுத்த ரூ.560 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
ஆனால், இவை அனைத்தையும் தமிழக அரசு என்ன செய்தது என்பது கேள்விக்குறி தான். தரமான சாலைகள், சுத்தமான குடிநீர், சுகாதாரமான நகரம் என எந்த அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை.
கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், இந்தியா டுடே பத்திரிக்கை கருத்துக் கணிப்பில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 61% மக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், இந்த ஆண்டு, வெறும் 36% மக்கள் ஆதரவை மட்டுமே அவர் பெற்றிருக்கிறார். தமிழகம் முழுவதுமே முதலமைச்சர் மீது அதிருப்தியும், திமுக ஆட்சி மீது வெறுப்பும் நிலவுகிறது.
தூய்மையான நகரங்களில் 44வது இடத்தில் இருந்த சென்னை, இந்த ஆண்டு, 199வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. 12% குப்பைகள் மட்டுமே அப்புறப்படுத்தப்படுகின்றன. 88% குப்பைகள் இடம் மாற்றி மட்டுமே வைக்கப்படுகின்றன.
சுத்தமான குடிநீரை கொடுக்க முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ரூ.2,69,000 கோடி கடன் வாங்கியிருக்கிறது. தமிழகத்தின் மொத்தக் கடன் ரூ.8 லட்சம் கோடி. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் இருக்கிறது.
ஆனாலும், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. தென்தமிழகத்திற்குச் செல்ல, பேருந்து பிடிக்கவே வெளியூரான கிளாம்பாக்கம் செல்ல வேண்டியிருக்கிறது. ஒரே ஒரு குடும்பத்திற்காக, மாநிலத்தின் நலன் அடகு வைக்கப்படுகிறது. கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அமைச்சர் சேகர் பாபுதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரே தவிர, முதலமைச்சர் ஸ்டாலின் இல்லை.
இந்தியா முழுவதும் உள்ள முதலமைச்சர்களின் தொகுதிகளை எடுத்துக் கொண்டால், முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியின் நிலை பரிதாபகரமாக இருக்கிறது.
தமிழகத்தில் சாமானிய மக்களுக்காக ஆட்சி செய்த பெருந்தலைவர் காமராஜர், மக்கள் திலகம் எம்ஜிஆர் உள்ளிட்ட எளிய பின்புலத்தில் இருந்து வந்த தலைவர்களால்தான், மக்களுக்கான ஆட்சியை, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆட்சியை வழங்க முடிந்தது. அதே போன்ற ஒரு சாதாரண பின்புலத்தில் இருந்து வந்த நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தான், சாதாரண மக்களின் பிரச்சினைகளைக் குறித்து சிந்தித்து, நலத் திட்டங்களைக் கொண்டு வர முடிந்திருக்கிறது.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு என மாதம் ரூ.3,000 பென்ஷன் வழங்கும் வகையில் மான் தன் யோஜனா திட்டம், மாதம் வெறும் ரூ.55 முதல் ரூ.200 வரை என்ற கட்டணத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. வருடத்திற்கு வெறும் ரூ.20 ரூபாய் செலுத்தி, 2 லட்சம் ரூபாய்க்கான விபத்துக் காப்பீடு திட்டம், மலக்குழி பணியாளர்களுக்கு, ரூ. 40,000 ஊக்கத் தொகையும் கொடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 ரூபாய் உதவித் தொகை வழங்கி பயிற்சியும் கொடுத்து, தொழில் தொடங்க ரூ.5 லட்சம் கடன் உதவி வழங்கப்படுகிறது. சாலையோர வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடனுதவி, ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை ஸ்வநிதி திட்டத்தில் வழங்கப்படுகிறது. முத்ரா திட்டத்தின் மூலம், சுயதொழில் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டங்களின் மூலம் தமிழகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ளனர். ஆனால், மக்களுக்கு இந்தத் திட்டங்களைக் கொண்டு செல்ல வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்களோ, திமுக அரசோ, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்தல் வாக்குறுதிகளாக திமுக கூறிய, ஆட்டோ வாங்க ரூ.10,000 மானியம், கூட்டுறவு வங்கிகள் மூலமாக வட்டியில்லாமல் ரூ.15,000 கடன் உதவி என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆனால், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, ஆட்டோ வாங்க மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் உதவி வழங்குகிறது.
அயோத்தி ராமர் கோவில் மூலம், உத்திரப் பிரதேச மாநிலத்திற்கு அடுத்த ஆண்டில் ரூ.4 லட்சம் கோடி வருமானம் வரும் என்றும், வரி வருமானம் மட்டுமே ரூ.25,000 கோடி அம்மாநில அரசுக்கு வரும் என்றும், ஸ்டேட் பாங்க் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் பல, புகழ்பெற்ற மசூதிகள், தேவாலயங்கள் இருக்கும் ஆன்மீக பூமியான தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு இது போன்று வரவிருக்கும் வருமானத்தை அறநிலையத் துறை தடுக்கிறது. தமிழகத்தில் உள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களை இணைத்தால் இதை விட அதிகமான வருமானம் வரும். அறநிலையத் துறை உண்டியல் வருமானத்தில் மட்டுமே குறியாக இருக்கிறது.
வரும் பாராளுமன்றத் தேர்தல், சென்னையை முழுமையாக மீள்கட்டமைக்க வேண்டியதன் முதற்படி. அடிப்படை கட்டமைப்பு, சுகாதாரம், மழை நீர் வடிகால், சுத்தமான குடிநீர் என அனைத்து வசதிகளும் மேம்பட, ஊழலற்ற, நேர்மையான நல்லாட்சி உருவாக, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்கும்போது, தமிழகத்தில் இருந்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சென்னையை முழுமையாக மாற்ற வேண்டிய நேரம் இது எனத் தெரிவித்தார்.