ஸ்ரீகாகுளம் திருத்தலம் அருகில் உள்ள அரசவல்லி சூரியநாராயண கோயிலில் சூரிய ஜெயந்தியை முன்னிட்டு இன்று காலை ரதசப்தமி விழா கோலாகலமாகத் தொடங்கியது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வடகிழக்கில், ஒடிசா மாநிலத்தை ஒட்டியுள்ள வங்காள விரிகுடாவின் கடற்கரையில் ஸ்ரீகாகுளம் திருத்தலம் அருகில் அரசவல்லி சூரியநாராயண கோயில் அமைந்துள்ளது.
இங்கு ஐந்தடி உயரத்துடன், கையில் தாமரை மொட்டு வைத்தபடி உஷா – சாயா தேவியர்களுடன் காட்சி தரும் சூரிய பகவானை பத்மபாணி என்று அழைப்பதுண்டு.
இக்கோயில் கலிங்க மன்னர் தேவேந்திரவர்மனால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, பின்னர் இக்கோயில், 17 – 18-ஆம் நூற்றாண்டுகளில் திருப்பணி செய்யப்பட்டது.
இக்கோவிலில் சூரிய ஜெயந்தியை முன்னிட்டு இன்று காலை ரதசப்தமி விழா கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழா தேவ மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்களுடன் தொடங்கியது. பிறகு சுவாமிக்கு பால், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
சூரிய ஜெயந்தி விழாவையொட்டி , கோவிலில் சூரிய பகவானுக்கு மலர் மாலை அலங்காரம் அணிவித்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.