டெல்லியில் தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக அந்த தொழிற்சாலை உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள அலிபூர் மார்க்கெட்டில் தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த பெயிண்ட் தொழிற்சாலையில் நேற்று மாலை சுமார் 5.15 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அந்த பெயிண்ட் தொழிற்சாலை உரிமையாளர் மீது காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானாவின் சோனிபட்டில் வசிக்கும் அகில் ஜெயின் என்பவர் இந்த பெயிண்ட் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனால் இந்த தொழிற்சாலை உரிமையாளர் மீது காவல் துறையினர் ஐபிசி பிரிவு 304 (கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை) மற்றும் 308 (குற்றமில்லா கொலை முயற்சி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை மூத்த அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் பெயின்ட் தொழிற்சாலையில் இருந்து 10 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மொத்தம் 11 எரிந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.