இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் அஸ்வின் செய்த தவற்றால் இந்திய அணிக்கு 5 ரன்கள் பெனால்டி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று ராஜ்கோட்டில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர். அதேபோல் அறிமுக வீரர்களான சர்ப்ராஸ் கான் 62 ரன்களும், துருவ் ஜூரெல் 46 ரன்களும் எடுத்தனர்.
இதை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. இங்கிலாந்து அணி களத்தில் இருக்கும் போதே 5 ரன்களுடன் இறங்கியது. அதற்கு காரணம் இந்திய அணிக்கு நடுவர் கொடுத்த 5 ரன் பெனால்டி தான்.
அதாவது நேற்றைய முதல்நாள் ஆட்டத்தின்போது இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஆடுகளத்தின் நடுவில் ஓடியதால் களத்தில் இருந்த நடுவர்கள் மூலம் வார்னிங் செய்யப்பட்டார். மேலும் தொடர்ந்து இதேபோல் நடக்க கூடாது என இந்திய அணியையும் நடுவர்கள் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் போட்டியின் இரண்டாம் நாளான இன்று அஸ்வின் பேட்டிங் செய்யும்போது ஆடுகளத்தின் நடுப்பகுதியில் ஓடியதால் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் நடுவரிடம் புகார் அளித்தார்.
அதனை சோதித்த நடுவர் அஸ்வின் செய்த தவறை சுட்டிக்காட்டி அவரது இந்த செயல் ஆடுகளத்தை சேதப்படுத்தும் விதமாக அமைந்ததாக கூறி இந்திய அணிக்கு 5 பெனால்டி ரன்களை வழங்குவதாக தனது முடிவை அறிவித்தார். இதனால் தான் இங்கிலாந்து அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டது.