தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். இந்த அமைப்பில் உள்ளவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு தமிழக ஆளுநரால் நியமனம் செய்யப்படுகின்றனர்.
தமிழக அரசின் பல்வேறு பணிகள் தொடர்புடைய விதிகள், கோட்பாடுகள் வழிமுறைகள் மற்றும் முடிவுகளை எடுப்பதில் அரசுக்குத் துணையாகச் செயல்பட்டு வருகிறது.
இதில், தேர்வாணையம் எடுக்கின்ற முடிவுகளை நடைமுறைப்படுத்துவது, அலுவலக நிர்வாகம், துறை பதவி உயர்வுக்குழு தொடர்புடைய பணிகளை நிர்வகிப்பது மற்றும் நேர்காணல் தேர்வு மற்றும் நியமனத்திற்கான பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றைப் பொறுப்பேற்று நடத்துவதில் செயலாளர் முக்கியப் பங்கு வகிக்கிறார்.
மேலும், போட்டித் தேர்வுகள் மற்றும் துறைத்தேர்வுகள் தொடர்பான அனைத்துவித பணிகளையும் மேற்கொள்வதில் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் அவர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்.
தற்போது, தேர்வாணையத்தின் பொறுப்பு தலைவராக முனியநாதன் ஐ.ஏ.எஸ். செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி-க்கு புதிய 5 உறுப்பினர்களைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்துள்ளார்.
அந்த வகையில், புதிய உறுப்பினர்களாக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவன் அருள், சரவணக்குமார் ஐ.ஆர்.எஸ்., தவமணி, உஷா சுகுமார், பிரேம் குமார் ஆகியோர் டி.என்.பி.எஸ்சி-யின் புதிய உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.