திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாகத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குற்றம் சாட்டி, அங்கித் திவாரியைக் கைது செய்தனர்.
மேலும், மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் சென்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அத்துடன், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் விசாரணை நடத்திய பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி அங்கித் திவாரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து, அங்கித் திவாரியின் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி விவே குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க கூடாது எனத் தமிழக அரசுத்தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் 28 -ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.