தென் மாவட்டங்களிலிலேயே, தேனி மாவட்டம் வீரபாண்டி மாரியம்மன் கோவில் சித்திரை விழா மிகவும் பிரபலம்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதலில் வரும் செவ்வாய்க்கிழமை கொடி ஏற்றப்படும். கொடியேற்றிய 22 -வது நாளிலிருந்து எட்டு நாள்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த எட்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவின் போது மட்டும், அம்மன் கோவில் தொடர்ந்து 24 மணி நேரமும் திறந்தே இருக்கும்.
இங்கு அத்தி மரத்தினாலான கொடிக்கம்பம் நடப்படும். அதற்கு முல்லை ஆற்றில் இருந்து நீர் எடுத்து வந்து ஊற்றி வழிபடுவது வழக்கம்.
விழாவின் போது அம்மனுக்கு மாவு பூஜை மட்டுமே நடைபெறும். அம்மனுக்கு நெய் வேத்தியமாகக் காப்பு அரிசி மாவு மட்டும் படைக்கப்படும். மேலும், சுற்றுவட்டார பகுதி மக்கள் அக்னி சட்டி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்வர்.
இப்படி புகழ் மிக்க வீரபாண்டி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வரும் மே 7 -ம் தேதி தொடங்க உள்ளது. இதனையொட்டி, ராட்டினங்கள் அமைப்பதற்கான ஏலம் ரூ.2.55 கோடிக்கு விடுக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட 59.40 லட்சம் அதிகமாகும்.
அதபோல, கண் மலர் ஏலம் ரூ.4.62 லட்சத்துக்கும், முடி காணிக்கை ஏலம் ரூ.10.62 லட்சத்துக்கும் விடுக்கப்பட்டுள்ளன.