இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க அதிபர் பைடன் மிகவும் கடினமாக உழைப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் அடுத்தடுத்து இந்திய மாணவர்கள் மர்ம முறையில் உயிரிழந்து வந்த சம்பவம் உலகெங்கும் உள்ள இந்தியர்களை அதிர்ச்சியடைய செய்தது.
ஜனவரி மாதத்தில் ஜியார்ஜியா மாநில லித்தொனியாவில், விவேக் சாய்னி எனும் மாணவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
பிப்ரவரி மாத தொடக்கத்தில் சையத் மசாஹிர் அலி எனும் இந்தியாவை சேர்ந்த அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் தாக்கப்பட்டார்.
ஒகையோ மாநிலத்தில் நிர்வாக மேலாண்மை பட்டம் படித்து வந்த இந்தியாவை சேர்ந்த ஸ்ரேயஸ் ரெட்டி பெனிகேரி என்ற மாணவர் உயிரிழந்தார்.
வெவ்வேறு சம்பவங்களில் பல இந்திய மாணவர்கள் உயிரிழப்பது, இந்தியர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை கோடிட்டு காட்டுகிறது என்றும் கல்லூரிகளும், காவல்துறையும் இணைந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க சமூகத்திற்கான தலைவர் அஜய் ஜெயின் புடோரியா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இந்திய மாணவர்களின் தாக்குதல் குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கான வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி, ” இனம், மதம், பாலினம் உள்ளிட்ட எந்த காரணங்களுக்காகவும் வன்முறை சம்பவங்கள் நடப்பதை அமெரிக்கா ஒரு போதும் சகித்து கொள்ளாது ” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், அமெரிக்காவில் தங்கி படித்து வரும் இந்திய மாணவர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிபர் ஜோ பைடன் தீவிரமாக உள்ளார். மாநில அரசுகளுடனும், உள்ளூர் நிர்வாகத்துடனும் மத்திய அரசு கலந்தாலோசித்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தங்கள் செயலுக்கு பொறுப்பேற்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது ” என்று தெரிவித்துள்ளார்.