தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் மூலமாக ‘நவகிரகச் சிறப்புப் பேருந்து’ சேவை வரும் 24 -ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த பேருந்து சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் இயக்கப்படும்.
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் இந்தப் பேருந்து, சூரியனார் கோவில், திங்களூர் சந்திரன் கோவில், ஆலங்குடியில் உள்ள குரு பகவான் கோவிலில் தரிசனம் முடிந்த உடன் காலை உணவு இடைவேளைவிடப்படுகிறது.
அடுத்து, திருநாகேஸ்வரம் ராகு பகவான் கோவில், கஞ்சனூர் சுக்கிரன் கோவில், வைதீஸ்வரன் கோவிலில் உள்ள செவ்வாய் கிரகக் கோவில் தரிசனம் முடிந்த உடன் மதிய உணவு இடைவேளையாகும்.
தொடர்ந்து, திருவெண்காட்டில் உள்ள புதன் பகவான் கோவில், கீழ் பெரும்பள்ளத்தில் உள்ள ராகு பகவான் கோவில், திருநள்ளாறுவில் உள்ள சனிஸ்வரன் கோவில் என நவகிரகக் கோயில்கள் அனைத்திலும் பயணிகள் தரிசனம் செய்யலாம்.
பின்னர், மாலை 6 மணிக்கு கும்பகோணம் பேருந்து நிலையம் வந்தடையும்.
இதற்கு பயணக் கட்டணமாக ரூ.750 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், TNSTC செயலியில் முன்பதிவு செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.