சென்னை தேனாம்பேட்டை அருகே மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ள பார்வையற்றோருக்கு, தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் 1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், என்.பி.எஸ்.சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை கிண்டி ரயில் நிலையம் மற்றும் கோடம்பாக்கத்திலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினரைக் கொண்டு அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில்தான், சைதாபேட்டை பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தி.மு.க தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை, பதவியேற்றது முதல் புறக்கணித்து வருவதால் பல்வேறு தரப்பினரும் தி.மு.க அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மறியல் போராட்டம் காரணமாகத் தேனாம்பேட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.