ஊட்டி அருகே நாடுகாணி வனப்பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் 55 சதவீதம் வனப்பகுதி ஆகும். டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை உறை பனி காரணமாக வனப்பகுதிகளில் அதிக அளவில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், மரங்கள், செடி, கொடி, புற்கள் என பலவும் காய்ந்து காணப்படுகிறது.
இந்த நிலையில், கூடலூர் நாடுகாணி வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டது. உடனே தகவல் அறிந்த, வனத்துறையினர், வேட்டை தடுப்புக் காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படாமல் இருக்க வனப்பகுதியை ஒட்டி உள்ள சாலையோரங்களில் சுமார் 20 மீட்டர் தூரம் வரை தீ தடுப்பு கோட்டை வனத்துறையினர் ஏற்படுத்தி வந்தனர். ஆனாலும், காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.