இன்றையப் போட்டியில் இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். அதற்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழம்பி இருந்தனர், அதற்கான விளக்கத்தை பிசிசிஐ தனது எக்ஸ் பத்தியில் தெரிவித்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர். அதேபோல் அறிமுக வீரர்களான சர்ப்ராஸ் கான் 62 ரன்களும், துருவ் ஜூரெல் 46 ரன்களும் எடுத்தனர்.
இதை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 319 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்களை எடுத்தார். இந்தியாவில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது. 3ஆம் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. அதேபோல் இந்திய அணி 322 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இன்றையப் போட்டியில் இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். அதற்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழம்பி இருந்தனர்.
இந்நிலையில் அதற்கான விளக்கத்தை பிசிசிஐ தனது எக்ஸ் பத்தியில் தெரிவித்துள்ளது. சமீபத்தில் காலமான இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்தியாவின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருமான தத்தாஜிராவ் கெய்க்வாட்டின் நினைவாக, இந்திய அணியினர் கையில் கருப்பு பட்டை அணிந்துள்ளனர் என பதிவிடப்பட்டிருந்தது.
கடந்த 13 ஆம் தேதி இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மிகவும் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரராக வாழ்ந்தவருமான தத்தாஜிராவ் கெய்க்வாட் தனது 95 வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடியது குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, தலைசிறந்த வீரருக்காக இந்திய வீரர்கள் முதல்நாள் ஆட்டத்தின்போது இதை செய்திருக்க வேண்டும். இது மிகவும் காலதாமதமாகும் என்று கூறினார்.