அமெரிக்காவில் உள்ள கொலராடோ ஸ்பிரிங்ஸ் பல்கலைக்கழக விடுதியில், நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, துப்பாக்கிக் கலாச்சாரம் என்பது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. இதனால், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, சமீப காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து உள்ளது.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள கொலராடோ ஸ்பிரிங்ஸ் பல்கலைக்கழகத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் திடீரென துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. இதில், 2 மாணவர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து விடுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.