இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், வானிலை மாற்றங்களை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இன்சாட்-3டிஎஸ் எனும் அதிநவீன செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.
ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து INSAT-3DS செயற்கைக்கோள், GSLV-F14 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட பின்னர் இன்சாட் 3டிஎஸ் திட்டத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ” இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக திட்டமிட்டபடி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இன்சாட் 3டிஎஸ் திட்டத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஒரு புதிய தலைமுறை செயற்கைக்கோள். வானிலை தொடர்பான பல்வேறு தரவுகளை புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக உடனுக்குடன் தரக்கூடிய திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள். செயற்கைக்கோளின் சோலார் பேனல்கள் சரியான முறையில் இயங்குகின்றன.
செயற்கைக்கோள் மிகச் சிறப்பாக செயல்படத் தொடங்கியுள்ளது. ஜிஎஸெல்வி 14, இன்சாட் 3டிஎஸ் மற்றும் செயற்கைக்கோளில் உள்ள பேலோட் எனப்படும் தரவுகளைச் சேகரிக்கும் அமைப்பை தயாரித்த அனைவருக்கும் பாராட்டுகள். ஜி.எஸ்.எல்.வியின் அடுத்த திட்டம் நாசாவுடன் இணைந்து செயல்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.