இந்து தெய்வமாக போற்றப்படும் சீதை என்ற பெயருடைய சிங்கத்துடன் முகலாய பேரரசர்களில் ஒருவரான அக்பர் என்ற பெயருடைய சிங்கத்தை ஒன்றாக வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என விஸ்வ ஹிந்து பரிஷத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.,
அக்பர்’ என்ற சிங்கத்துடன் ‘சீதா’ என்ற பெண் சிங்கம் அடைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விஎச்பி முறையீடு செய்துள்ளது. திரிபுரா மாநிலம் செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பெங்கால் சஃபாரி பூங்காவிற்கு பிப்ரவரி 12 ஆம் தேதி இரண்டு சிங்கங்கள் கொண்டுவரப்பட்டன.
இந்த இரண்டு சிங்கத்தில் ஏழு வயதுடைய ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்று பெயரும், ஆறு வயது பெண் சிங்கத்திற்கு சீதா என்ற பெயரும் சூட்டப்பட்டது.
இந்நிலையில் இந்து தெய்வமாக போற்றப்படும் சீதை என்ற பெயருடைய சிங்கத்துடன் முகலாய பேரரசர்களில் ஒருவரான அக்பர் என்ற பெயருடைய சிங்கத்தை ஒன்றாக வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என்றும் சீதை என்ற சிங்கத்திற்கு பெயர் மாற்றப்பட வேண்டும் என்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், “மேற்கு வங்க வனத்துறை சிங்கங்களுக்கு பெயரிட்டுள்ளது. அக்பர் புகழ்பெற்ற முகலாய பேரரசர்களில் ஒருவர். சீதா வால்மீகி ராமாயணத்தில் ஒரு பாத்திரம். மேலும், இந்து மத வழக்கங்களில் சீதை தெய்வமாக கொண்டாடப்படுகிறார்.
எனவே, அக்பர்’ உடன் ‘சீதா’வை தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என்பதால் சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும். அக்பரின் துணை சீதையாக இருக்க முடியாது” என்று கோரியுள்ளது.