கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மித்சோடாகிஸ் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார்.
கிரீஸ் பிரதமர் கிரியகோஸ் மித்சோடாகிஸ் பிப்ரவரி 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். அவருடன் மூத்த அதிகாரிகள் மற்றும் முக்கிய வர்த்தகக் குழு ஒன்றும் வருகிறது.
பாரத பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், கிரீஸ் பிரதமரின் இந்த பயணம் அமைகிறது. கிரீஸ் பிரதமரின் வருகையை மத்திய வெளிவிவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறையிலான சிறப்பு வரவேற்பு அளிக்கப்படும். பின்னர், இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு விவாதங்களில் பங்கேற்பார்கள்.
தலைநகர் டெல்லியில் நடைபெறும் 9-வது ரெய்சினா பேச்சுவார்த்தையில் சிறப்பு விருந்தினராக கிரீஸ் பிரதமர் கலந்து கொள்வார். மேலும், மும்பைக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளார்.
கடைசியாக 2008-ஆம் ஆண்டில், கிரீஸின் பிரதமராக இருந்த கொஸ்டாஸ் கரமன்லிஸ், அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடன் இந்தியாவுக்கு வந்தார். 15 ஆண்டுகள் கழித்து, தற்போதைய கிரீஸ் பிரதமர் கிரியகோஸ் மித்சோடாகிஸின் இந்திய பயணம் அமைகிறது.
இதற்கிடையே, கடந்த ஆண்டு அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி கிரீஸ் நாட்டுக்கு சென்றார். இதனை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் சார்ந்த நட்புறவானது அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.