நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு 18 அடி உயரமுள்ள ஒற்றைக் கல்லினால் ஆன ஆஞ்சநேயர் உள்ளார். இது இந்தியாவிலேயே மிக உயரமான ஆஞ்சநேயர் சிலையாகும். இந்த கோவிலுக்குக் கோபுரம் கிடையாது.
மேலும், இக்கோயில் விஷ்ணுவின் ஒரு அவதாரமான நரசிம்மர், அனுமன் மற்றும் லட்சுமி தேவிக்குக் காட்சியளித்த இடமாகக் கூறப்படுகிறது. இங்கு ஒரே கல்லால் ஆன 18 அடி உயர ஆஞ்சநேயர் வணங்கிய நிலையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் பக்தர்கள் மட்டும் அல்லாமல் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து செல்கிறார்கள். குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
18 அடி உயர ஆஞ்சநேயருக்கு, முக்கிய நாட்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். இந்த நிலையில், ஆஞ்சநேருக்கு இன்று ஆயிரத்து எட்டு லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அபிஷேகம் செய்யப்பட்ட பால் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தர்கள் அனைவரும் ஆஞ்சநேரை பயபக்தியுடன் வணங்கினர்.