காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு காமாட்சியம்மன், லட்சுமி, சரஸ்வதியுடன் தங்க சூரிய பிரபையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும், அவற்றில் அம்மன் சன்னதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாகத் திகழ்கிறாள். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.
இந்த நிலையில், சக்தி பீட தலங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாதம் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பிரம்மோற்சவ உற்சவத்தை முன்னிட்டு, காமாட்சியம்மன் லட்சுமி, சரஸ்வதியுடன் தங்க சூரிய பிரபையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர், மேள தாளங்கள், வாத்தியங்கள் முழங்க, காஞ்சிபுரம் நகரின் நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வந்தார். இவ்வாறு வலம் வந்த காமாட்சி அம்மனை வழியெங்கும் உள்ள பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.