தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விமானத்தில் பயணித்த நடிகை ராஷ்மிகா மந்தனா உயிர் தப்பி வீடு திரும்பினார்.
டாடா க குழுமம் இயக்கி வரும் விமான நிறுவனமான விஸ்டாரா, அதற்கு சொந்தமான விமானம் ஒன்று பயணிகளுடன் மும்பையிலிருந்து ஐதராபாத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் புறப்பட்ட 30 நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
அந்த விமானத்தை இயக்கி வந்த விமானி உடனடியாக அந்த விமானத்தை மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி வந்து தரையிறக்கினார்.
இந்த விமானத்தில் பிரபல திரைப்பட நடிகை ராஷ்மிகா மந்தனா பயணம் செய்தார். இதுகுறித்து ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் “மரணத்தில் இருந்து இப்படித்தான் தப்பினோம்” என தலைப்பிட்டு பகிர்ந்திருந்தார். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ராஷ்மிகா, கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
விபத்து நேரிடாமல் அதிர்ஷ்டவசமாக ராஷ்மிகா உயிர் தப்பியதால், அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். இதே விமானத்தில் ராஷ்மிகாவுடன், நடிகை ஷ்ரத்தா தாசும் பயணித்தது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்தில் கோளாறு உடனடியாக சரி செய்யப்படாததால், மாற்று விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.