அயோத்தியில் உள்ள பகவான் ஸ்ரீ ராமர் கோவிலுக்கு வாரத்தின் முதல் வேலை நாளான இன்றும் கூட காலை முதலே பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. பாரதப் பிரதமர் மோடி பூஜைகள் செய்து குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார்.
கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்தியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்.
முன்னதாக நாள்தோறும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தா்கள் ராமா் கோயில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
ஆனால் தற்போது ராமா் கோவிலின் தரிசனம் நேரம் மாற்றியமைக்கப்பட்டு, நாள்தோறும் பிற்பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ஒரு மணி நேரம் கோயில் நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ராமர் கோவில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. வாரத்தின் முதல் வேலை நாளான இன்றும் கூட காலை முதலே பக்தர்கள் பாகவன் ஸ்ரீ ராமரை தரிசிக்க வந்தவண்ணம் உள்ளனர்.