சிங்கப்பூர் விமானக்கண்காட்சியில் இந்திய விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் குழு பங்கேற்கிறது.
சிங்கப்பூர் விமானப்படையின் சாங்கி விமானத் தளத்தில் சிங்கப்பூர் விமானக் கண்காட்சி நாளை (பிப்ரவரி 20)தொடங்குகிறது. இதற்காக சாரங் ஹெலிகாப்டர் கண்காட்சிக் குழு கடந்த 12-ந்தேதி சிங்கப்பூர் சென்றது.
நேற்று முதல் கட்ட பயிற்சியில் அக்குழுவினர் ஈடுபட்டனர். இந்த விமானக் கண்காட்சியில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு விமானக் கண்காட்சி குழுக்கள் பங்கேற்கின்றன. மேலும் இந்தக் கண்காட்சியில் முன்னணி விமான கணினி உற்பத்தியாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துகின்றனர்.
சாரங் குழுவினர் இயக்கும் மேம்பட்ட இலகு ரக துருவ் ஹெலிகாப்டர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. முதல் முறையாக இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் சாரங் குழு நான்கு ஹெலிகாப்டர் காட்சிகளை நிகழ்த்துகிறது. ஏ.எல்.எச் துருவ்வின் போர்த்திறன் மற்றும் இந்த இயந்திரங்களை இயக்கும் ஐ.ஏ.எஃப் விமானிகளின் உயர் அளவிலான திறன்களை முன்னிலைப்படுத்தும் வகையில் இந்தக் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏஎல்ஹெச் மற்றும் அதன் மேம்பட்ட வகைகள் இந்தியாவின் அனைத்து ராணுவ சேவைகளாலும் இயக்கப்படுகின்றன. இந்தத் தளத்தின் வெற்றிகரமான அறிமுகம் மற்றும் செயல்பாட்டுப் பயன்பாடு பாதுகாப்புத் துறையில் தற்சார்பு இந்தியாவின் பிரகாசமான நடவடிக்கைகளில் ஒன்றாகும்.