இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. பின்பு நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியிலிருந்து ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணிச்சுமை காரணமாக அவருக்கு ஏற்கனவே 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இருப்பினும் அந்த போட்டியிலிருந்து மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ராவிற்கு ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 4-வது போட்டியின் முடிவை பொறுத்தே அவர் கடைசி போட்டியில் இடம்பெறுவாரா இல்லையா என்பது தெரிய வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
மீதமுள்ள 2 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும். அனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முன்னேறவேண்டும் என்றால் இந்தியா 2 போட்டிகளிலும் வெற்றி பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.