பிப்ரவரி 21-ம் தேதி மத்திய அரசிடம் MSP சட்டத்தை வலியுறுத்தி டில்லி சலோ பேரணியை மீண்டும் தொடங்க உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
பிரிவினைவாதிகளின் தூண்டுதலின்பேரில், விவசாயிகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியை நோக்கி பேரணி செல்ல முடிவு செய்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அவர்களிடம் மத்திய அரசு சார்பில், மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, விவசாயிகள் போராட்டம், அரசின் நடவடிக்கைகளுக்குத் தடை ஏற்படுத்துவதாகவும், பொது மக்களுக்குக் கடும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதாகவும், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தற்காலிக தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா மற்றும் நீதிபதி லபிதா பானர்ஜி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, நெடுஞ்சாலைகளில் டிராக்டர்கள் மற்றும் தள்ளுவண்டிகளைப் பயன்படுத்த முடியாது என்று விவசாயிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
மேலும், இது தொடர்பான புதிய பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறிய நீதிமன்றம், விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தது.