டெல்லி, புனே ஆகிய இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.3,500 கோடி மதிப்புள்ள ‘மியாவ் மியாவ்’ என்ற போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல்வேறு இடங்களில் போதைப்பொருளின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க போலீசார் தொடர்ந்து முயற்சி செய்தும் சோதனை நடத்தியும் வருகின்றனர்.
அப்படி டெல்லி மற்றும் புனேவில் நடைபெற்ற சோதனையில் சுமார் 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான ‘மியாவ் மியாவ்’ எனப்படும் தடைசெய்யப்பட்ட 1,800 கிலோ மெபெட்ரோன் என்ற போதைப்பொருளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக நடைபெற்று வரும் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்களில் இதுவும் ஒன்று என தெரியவந்துள்ளது.
நேற்று புனேவின் விஷ்ராந்த்வாடி பகுதியில் உள்ள இரண்டு குடோன்களிலும், எம்ஐடிசி பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் 600 கிலோ ‘மியாவ் மியாவ்’ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதே போல் டெல்லியில் உள்ள குடோன்கள் மற்றும் பிற இடங்களில் இருந்தும் மேலும் பல போதைப் பொருட்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக புனே மற்றும் டெல்லியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக புனே காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று டெல்லி மற்றும் புனேவில் போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக புனே காவல்துறையின் கண்காணிப்பில் பலர் கைது செய்யப்படலாம் என்று கூறியுள்ளனர்.
‘மியாவ் மியாவ்’ என்றும் அழைக்கப்படும் Mephedrone, NDPS சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட ஒரு செயற்கை தூண்டுதல் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருளாகும்.