விண்வெளித்துறையில் நூறு சதவீத அந்நிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் விண்வெளித் துறையில் 100% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த நடவடிக்கை விண்வெளித் துறையில் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு சாத்தியமான முதலீட்டாளர்களை ஈர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்திய நிறுவனங்களை உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் ஒருங்கிணைப்பதற்கு இது வழிவகுக்கிறது.
மேலும் ‘மேக் இன் இந்தியா மற்றும் ‘ஆத்மநிர்பர் பாரத்’ முயற்சிகளுக்கு உத்வேகம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விண்வெளித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் செயற்கைக்கோள் துணைத் துறையை மூன்று வெவ்வேறு செயல்பாடுகளாகப் பிரித்து, அத்தகைய ஒவ்வொரு துறையிலும் வெளிநாட்டு முதலீட்டிற்கான வரையறுக்கப்பட்ட வரம்புகளுடன் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போதுள்ள அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையின்படி,செயற்கைக்கோள்களை நிறுவுவதற்கும் இயக்குவதற்கும் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது.
தற்போது இந்திய விண்வெளிக் கொள்கையின் கீழ் உள்ள தொலைநோக்கு மற்றும் உத்திக்கு ஏற்ப, மத்திய அமைச்சரவை பல்வேறு துணைத் துறைகள், செயல்பாடுகளுக்கு தாராளமயமாக்கப்பட்ட FDI வரம்புகளை பரிந்துரைப்பதன் மூலம் விண்வெளித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையை எளிதாக்கியுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.
அதிகரித்துள்ள தனியார் துறை பங்கேற்பு, வேலைவாய்ப்பு, நவீன தொழில்நுட்பத்தை உள்வாங்கவும் மற்றும் துறையை தன்னிறைவு பெறவும் இந்த நடவடிக்கை உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.