இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களுடன் இணைந்து காஷ்மீரின் சாலைகளில் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் என்று சொன்னாலே நம் அனைவர்க்கும் நினைவில் வரும் பெயர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த நிகழ்த்திய அவருக்கு செல்லும் இடமெல்லாம் ரசிகர் பட்டாளம் தான் சூழ்ந்திருக்கும்.
உலக கிரிக்கெட்டில் எத்தனையோ சாதனைகளை தனக்கு சொந்தமாக மாற்றிய சச்சின் டெண்டுல்கர், பிடித்ததை செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தார்.
இவர் சர்வதேச கிரிக்கெட் விளையாடி 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்றளவும் அவருகேற்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
சச்சின் கிரிக்கெட்டை விட்டு விலகினாலும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அதேபோல் ஓய்வுக்கு பின் வர்ணனை, பயிற்சி, விளம்பரங்கள், ஆலோசகர் என்று கிரிக்கெட் தொடர்புடைய பல்வேறு பணிகளை சச்சின் டெண்டுல்கர் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளார். சச்சின் டெண்டுல்கருடன் அவரின் மனைவி அஞ்சலி மற்றும் மகள் சாரா ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.
இதனிடையே 2 நாட்களுக்கு முன்பாக காஷ்மீரின் சாலையில் திடீரென காரை நிறுத்திய சச்சின் டெண்டுல்கர், பேட் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சென்று அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
அப்போது காஷ்மீர் வில்லோவில் தான் தனது முதல் பேட் தயாரானதாகவும், சிறுவயதில் அவரின் சகோதரி அளித்த பேட்டும் காஷ்மீர் வில்லோவில் தான் தயாரிக்கப்பட்டிருந்தது என்றும் கூறி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், காஷ்மீரில் காரில் பயணித்த சச்சின் டெண்டுல்கர் சாலையில் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்து நிறுத்தினார்.
அதன்பின் உடனடியாக கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களுடன் சச்சினும் இணைந்து கிரிக்கெட் விளையாட, அந்த சூழலே உற்சாகமாகியது. சச்சின் பேட்டிங் செய்ய இளைஞர்கள் சிலர் பவுலிங் செய்தனர்.
அப்போதும் கூட சச்சின் தனது ட்ரேட் மார்க் ஸ்வீப் ஷாட்டை ஆடினார். அதுமட்டுமல்லாமல் பேட்டை திருப்பி பிடித்து கொண்டு சச்சின் பேட்டிங் செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இறுதியாக சச்சின் டெண்டுல்கர் இளைஞர்கள் அனைவருடனும் செல்பி எடுத்து கொண்டு விடைப்பெற்றார். இந்த வீடியோவை சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, கிரிக்கெட்டும், காஷ்மீரும்: சொர்க்கத்தில் நடக்கும் ஆட்டம் என்று கூறியுள்ளார்.