2வது மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) தொடர் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
ஐபிஎல் போன்று பெண்களுக்காக மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 5 அணிகள் விளையாடின.
முதல் சீசனில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. மார்ச் மாதம் நடைபெற்ற இதன் முதலாவது சீசன் போட்டிகள் அனைத்தும் மராட்டிய மாநிலம் மும்பையில் மட்டுமே நடத்தப்பட்டன.
இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக்இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், கடந்த ஆண்டு 2-வது இடம் பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் விளையாடுகிறது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை அணி கடந்த சீசனில் 10 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 2 தோல்வியை சந்தித்தது.
மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் கடந்த ஆண்டு 9 போட்டியில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்வி சந்நதித்தது. இவ்விரு அணிகளும் 3 முறை நேருக்கு நேர் மோதியதில் மும்பை 2 முறையும், டெல்லி ஒரு முறையும் வெற்றி பெற்றன.
இன்று தொடங்கும் முதல் போட்டியானது பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மார்ச் 17 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மகளிர் கிரிக்கெட் போட்டியில் முதல் 11 லீக் போட்டிகள் பெங்களூருவிலும், அடுத்த 9 லீக் போட்டிகள் மற்றும் வெளியேற்றுதல் சுற்று, இறுதிப்போட்டி ஆகியவை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்திலும் நடைபெறவுள்ளன.